September 16, 2020
தண்டோரா குழு
ஜவுளி துறையில் சர்வதேச சந்தையில் இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு( ஐடிஎப் ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்க ஆயத்த ஆடை சந்தையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் ஆதிக்கம் குறைய தொடங்கியது.2019 ஆம் ஆண்டில், ஏறத்தாழ 20000 கோடி மதிப்பிலான சந்தையை சீனா இழந்தது. கோவிட்-19 பிறகு, இந்த சரிவு அதிகமாகி உள்ளது.கோவிட் பாதிப்பினால், ஒட்டுமொத்த அமெரிக்க ஆயத்த ஆடை இறக்குமதி 30% குறைந்துள்ளது. ஆனால், சீனாவின் சரிவு 49% சதவீதமாக இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் உள்ளது.
இந்த சூழலில்,மனித உரிமை மீறல் போன்ற காரணங்களால், சீனாவின் பெரிய ஜவுளி தயாரிப்பு பகுதியான Xinjiang இல் இருந்து இறக்குமதிக்கான தட்டுப்பாடுகளை அமெரிக்கா துவங்கியுள்ளது. சீனாவின் ஆயத்த ஆடை சந்தை, இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது, ஆயத்த ஆடை துறையில் ஏறத்தாழ $10 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்க சந்தையில், சீனாவின் பங்கு குறைந்து, மற்ற நாடுகளுக்கு ஒரு புது வியாபார வாய்ப்பாக இது அமையும்.இந்த வாய்ப்பை, இந்தியா ஆயத்த ஆடை கிளஸ்டர்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி கொண்டால், இரண்டு இலக்க ஏற்றுமதி வளர்ச்சியை இந்தியா இத்துறையில் எட்டலாம்.
மேலும், ஐரோப்பிய யூனியன்-வியட்னாம் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தால், வியட்னாம் வரி இல்லாமல் ஐரோப்பிய யூனியன் சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை பெற்று இருப்பதால்,நமது ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி மேலும் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.அதே சமயம், அமெரிக்க சந்தையை இந்தியா, வங்கதேசம், வியட்னாம் மூன்று நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு உள்ளதால், நம்மால் போட்டியிட முடியும்.ஆகவே, அமெரிக்க சந்தையை கைப்பற்ற இது சரியான தருணம்.
தமிழகத்தின் பல கிளஸ்டர்கள், தொடர்ச்சியான முறையில் உலகத்தரம், சரியான சமயத்தில் பொருட்களை சப்ளை செய்வது, சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் ஆடைகளை தயாரிப்பது, போன்ற பல இன்றைய காலகட்டத்துக்கு தேவையான பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி இருப்பதால், தமிழகம் உற்பத்தியாளர்கள், குறிப்பாக SME க்கள், சிறு மார்க்கெட்டிங் குழுமங்களை அமைத்து, , அமெரிக்க சந்தையில் மேற்கூறிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி சந்தையை கைப்பற்ற முயல வேண்டும்.
தமிழக ஆயத்த ஆடைத்துறை, தன்னை சீனாவிற்கு மாற்றாக அமெரிக்கா சந்தையில் நிலை நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும்.இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு அமைப்பின் சார்பாக, எங்கள் உறுப்பினராக உள்ள ஆயத்த உற்பத்தி நிறுவனங்களை, அமெரிக்க சந்தையில் முழு தீவிர கவனம் செலுத்தும்படி ஆலோசனை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.