September 15, 2020
தண்டோரா குழு
நீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம் என முதல்வர் பழனிச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது பேசிய ஸ்டாலின்,
‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை. தற்போது நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.கருணாநிதி, முதல்வராக இருந்த வரை,தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட வில்லை எனக்கூறினார்.
இதற்கு முதல்வர் பழனிச்சாமி ஆவேசமாக பதிலளித்தார்.அவர் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது தான் நீட் தேர்வுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. 2010ல் கொண்டு வரப்பட்ட சட்டம் காரணமாக, தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட போது, காங்., கூட்டணியில் இருந்தது யார்? தேர்வை அறிமுகப்படுத்தியது யார் என்பதை நாடே அறியும். நீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுக தான் காரணம். கூட்டணியில் இருந்து திமுக நாட்டை குட்டி சுவராக்கியுள்ளது இதனால் தான் 13 பேர் மரணமடைந்துள்ளனர். நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது.யார்அறிமுகப்படுத்தினார்கள். பதில் சொல்லுங்கள் என்று பேசினார்.