September 15, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முடநீக்கியல் துறையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை உறுப்புகளை தயாரிக்கும் மையத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு வரத்துவங்கி உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்தும் மேல் சிகிச்சைக்காக தினமும் கோவை அரசு மருத்துவமனைக்கு மக்கள் வந்து செல்கின்றனர். இதய அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம் ஆகிய முக்கிய அறுவை சிகிச்சைகளும் கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் துறைக்கு சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு செயற்கை உறுப்புகளை பொருத்த, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை உறுப்பு தயாரிப்பு மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.இதன் மூலம் விபத்து அல்லது சர்க்கரை உள்ளிட்ட சில உடல் பிரச்சனைகளால் உறுப்புகளை இழக்கும் ஏழை எளிய மக்கள் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் செயற்கை உறுப்புகளை பொருத்திக்கொள்ள முடியும். இது வரை செயற்கை உறுப்புகளை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பொருத்த முடியும் என்ற நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையிலேயே உறுப்புகள் தயாரிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுவதால் ஏழை எளிய மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பழ வியாபாரம் செய்து வந்தார். சர்க்கரை காரணமாக அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு செயற்கை உறுப்பு மையம் மூலம் கால் உருவாக்கப்பட்டு சுப்பிரமணிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி முடநீக்கியல் துறை பேராசிரியர் டாக்டர் வெற்றிவேல் செழியன் கூறும்போது,
தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முடநீக்கியல் துறையில் சிகிச்சைக்கு வரும் மக்கள் எக்ஸ்ரே எடுக்க காத்திருக்க தேவையில்லை, உடனடியாக அதே பிரிவில் எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்தால் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முடநீக்கியல் மையத்தில் இலவசமாக செயற்கை கால், கை பொருத்திக்கொள்ள முடியும். கோவை மாவட்டம் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலிருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை தங்கி சிகிச்சை பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய படுக்கைகள் கொண்ட பிரத்தியோக பிரிவு இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் நோயாலிகளை கண்காணித்து வருகின்றனர்.