September 12, 2020
தண்டோரா குழு
நீட் தேர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
நீட் தேர்வை அரசு அறிமுகப் படுத்தியதில் இருந்தே தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இருப்பினும், பல எதிர்ப்புகளுக்கிடையே நாளை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.
நேற்று முன்தினம் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, இன்று காலை ஜோதி துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதால், அரசியல் தலைவர்கள் பலர் நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவையில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.