September 10, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு கொள்ளையர்கள் சிக்கினர்.
கடந்த சில மாதம் முன் ஜி எம் மில் பகுதியில் இரவு நேரத்தில் பூட்டி இருந்த ஒரு வீட்டின் கதவினை உடைத்து வீட்டிலிருந்து சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கவுண்டம்பாளையம்,தடாகம் ஆகிய இடங்களிலும் இரவு நேரங்களில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடைபெற்று வந்தது.
இதுபோன்ற அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பற்றிய எவ்வித விபரங்கள் அறியாத நிலையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும் சம்பவம் இடங்களில் கிடைத்த பல்வேறு விடயங்கள் அடிப்படையிலும் , சிறையில் இருந்து வந்த கைதிகளின் விவரங்களை சேகரித்தும் விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் ஆகிய இருவர்க்கும் கோவை தொடர் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்து.
அதனடிப்படையில் அந்த குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இடையர்பாளையம் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு வழிப்பறி வழக்கில் இரு குற்றவாளிகளையும் தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தது ஒப்புக் கொண்டனர்.இவர்களுக்கு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ளது. 2015 ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடந்த 150 சவரன் வழிபறி கொள்ளையில் தொடர்பு உள்ளவன் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணைக்கு பிறகு அவர்களிடமிருந்து 42 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்