September 9, 2020
தண்டோரா குழு
உடுமலையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த தன்னை, காவல் ஆய்வாளர் மிரட்டி புகாரை வாபஸ் பெற வற்புறுத்துவதாக கூறி பாதிக்கப்பட்ட நபர் கோவையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் முருகானந்தம்.அவருக்கும் திருமூர்த்திமலை தேங்காய்களத்தை சேர்ந்த முத்துசாமி ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே தொழில் ரீதியிலான முன் விரோதம் இருந்துள்ளது. முத்துசாமி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. இதனைடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முத்துசாமி தனது ஆதர்வாளர்களுடன் முருகானந்தத்தை கடுமையாக தாக்கியதில் தோள்பட்டை மற்றும் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் இது குறித்து அளித்த புகாரின் பேரில் முத்துசாமியை தவிர்த்து மற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பின்னர் ஒரு மாதம் தலைமறைவாக இருந்த முத்துசாமி உயர்நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்றதுடன் மீண்டும் முருகானந்தத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அவர் உடுமலையை அடுத்த தளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுக்கும் முத்துசாமிக்கு சாதகமாக புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டுவதாக கூறி பாதிக்கப்பட்ட முருகானந்தம் கோவையிலுள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யாவை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மேலும் தினசரி தன்னால் நிம்மதியாக இருக்க இயலவில்லை எனவும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலில் காவல்துறையினர் முத்துசாமியை கைது செய்வதுடன் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.