September 8, 2020
தண்டோரா குழு
கோவை துடியலூர் அருகிலுள்ள அண்ணா காலனியை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் யாராவது இறந்தால் துடியலூரில் இருந்து அப்பநாயக்கன்பாளையம் செல்லும் வழியிலுள்ள காளிம்மாள் காலனி எதிர்புறம் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வந்தனர். அதேபோல புது முத்துநகர், காந்தி வீதியை சேர்ந்தவர்களும் இங்கே தான் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகின்றனர்.
தற்போது அதன் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் இடம் வாங்கி வீடு கட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக ரியல் எஸ்டேட் வாயில் முன்பாக புதைக்க வேண்டாம் என்று ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இறந்தவரின் உடலை புதைக்க சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறை தலையிட்டு ரியல் எஸ்டேட் வாயில் அருகிலேயே இறந்தவர் உடலை புதைத்தனர்.
இந்த நிலையில் இன்று அண்ணாகாலனியை சேர்ந்த 73 வயதான மூதாட்டி பழனியம்மாள் இறந்தார். இவரை புதைக்க சென்றபோது ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறி இறந்தவரின் உறவினர்கள் மற்றும் அண்ணா காலனியை சேர்ந்த மக்கள் திடீரென துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவையில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் ஆம்புலன்ஸ் மற்றும் இறந்தவரின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதே இடத்தில் புதையுங்கள் என்று காவல்துறை கூறியதை தொடர்ந்து இறந்தவரின் உடலை கொண்டு சென்ற உறவினர்கள் மற்றும் அண்ணா காலனியை சேர்ந்தவர்கள் சுடுகாட்டில் குழி தோண்டி இறந்தவருக்கு உரிய மரியாதை செலுத்தி புதைத்தனர். இதன் காரணமாக கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே மாலை மேலும் ஒருவர் இறந்துவிட அவரின் உடலையும் அதே சுடுகாட்டில் ரியல் எஸ்டேட் நிறுவன வாயில் முன்பாக புதைக்க எடுத்துச் சென்றபோது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கோவை வடக்கு தாசில்தார் மகேஷ் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இறந்த உடல்களை சற்று தள்ளி புதைக்கவும், சுற்றி வேலி அமைக்கவும், மேலும் வரும் 2 நாட்களில் இரு தரப்பினர்களையும் அழைத்து பேசவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.