September 7, 2020
தண்டோரா குழு
நிலத்தை மீட்டுத்தாருங்கள் அல்லது தன்னையும் தனது மகள்கள் மூவரையும் கருணை கொலை செய்ய அனுமதி கோரி 96வயது மூதாட்டி
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் அதிகுட்டை பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் என்னும் 96 வயது மூதாட்டி. இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளார்
அதில் அவர் கூறியிருப்பதாவது
என்னுடைய மகன் நான் உயிருடன் உள்ளபோதே என்னுடைய 12 ஏக்கர் 94 சென்ட் நிலத்தை போலி பத்திரம் செய்து அபகரித்து விட்டார். இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி என்னுடைய மகன் மரணம் அடைந்து விட்டார். எனவே என்னுடைய விவசாய நிலத்தை ஆய்வு செய்து மீண்டும் எனக்கு திருப்பித் தரவேண்டும் இல்லையென்றால் என்னையும் எனது மூன்று மகள்களையும் கருணை கொலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்வதாகவும் மேலும் இது போன்று கருணை கொலை முடிவு எல்லாம் எடுக்கக்கூடாது என்று வயதான மூதாட்டி அறிவுரை கூறி போக்குவரத்து செலவிற்கு 100 ரூபாய் வழங்கி வழியனுப்பி வைத்தார்.