September 5, 2020
தண்டோரா குழு
கோவை ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது. குறைந்த அளவிலானோர் மட்டுமே ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், வரும் 7-ம் தேதி முதல் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.சென்னையில் காலை 6.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 2.05 மணிக்கு கோவையை சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு,இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.சென்னை-கோவை இடையே இரவு நேர சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. சென்னையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 6 மணிக்கு கோவையை சென்றடையும்.அன்றைய தினம் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 6.35 மணிக்கு வந்துசேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கோவை மயிலாடுதுறை இடையே வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. அதன்படி கோவை ரயில் நிலையத்தில் காலை 8 மணிக்கு முன்பதிவு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டது. இருப்பினும் பெரும்பாலானோர் சிறப்பு ரயில்களுக்கு இணையதளங்களில் முன்பதிவு செய்வதால், ரயில்நிலைய கவுன்டர்களில் குறைந்த அளவிலானோர் மட்டுமே முன்பதிவு செய்து வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு முன் பதிவு செய்ய வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்கவும் சமூக இடைவெளியை பின்பற்றி கவுன்டர்களில் வரிசையில் நிற்கவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு கைகளை சுத்தி படுத்திக்கொள்ள சானிடைசர் வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே ரயில் நிலைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.