August 27, 2020
தண்டோரா குழு
கொரோனாவால் ஓணம் திருவிழா களை இழந்தது. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் செல்லாததால் மார்க்கெட்டில் தேக்கம் அடைந்துள்ளது.
கேரளா மக்கள் விமர்சையாக கொண்டாடும் ஓணம் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் தினமும் மாவேலி மண்ணை மன்னனை வரவேற்க பூ கோலம் போடுவார்கள் அதற்காக பலவிதமாக பூக்களை மக்கள் வாங்குவது வழக்கம்.குறிப்பாக சென்று பூ, சம்பந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான டன் கணக்கில் கேரளாவுக்கு அனுப்பப்படும் தற்போது கொரோனா காரணமாக கேரளாவில் ஓணம் திருவிழா களை இழந்து காணப்படுகிறது.மேலும் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை ஆா்.எஸ்.புரத்தில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பூ மார்க்கெட் வியாபாரி சங்க பொருளாளர் ஐயப்பன் கூறியதாவது,
ஓணம் பண்டிகை மட்டுமல்லாமல் வழக்கமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ், லாரிகள்,ரயில்கள், பூக்கள் மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் பொது போக்குவரத்து முடங்கியுள்ளதால் கேரளாவுக்கு பூக்கள் அனுப்பி வைக்க முடியவில்லை தினமும் மூன்று லோடுகளில் மட்டும் பூக்கள் செல்கிறது.பூக்கள் செல்லாததால் தேக்கமடைந்து உள்ளதால் அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஓணம் திருவிழாவுக்கு பூ கோலம் போட பயன்படும் செண்டு பூ கிலோ 30 ரூபாய் சம்பங்கி ரூ 40 வாடாமல்லி ரூபாய் 15 என்று உள்ளது. இது தவிர மல்லிகை பூ ரூபாய் 400 முல்லை ரூபாய் 200, ஜாதிப்பூ ரூ 200 என்று விற்பனையாகிறது என்றார்.