August 27, 2020
தண்டோரா குழு
கொரொனா காலத்தில் பணியாற்றி கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு கோவை மாவட்ட ஊடகவியலாளர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தொற்றால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு கடந்த இரு மாதங்களாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. முழு ஊரடங்கால் பல்வேறு அரசு அலுவலகங்கள் உட்பட தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொது போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டன. அப்படிப்பட்ட நிலையிலும் காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக நின்று செய்திகளை மக்களிடம் சேர்க்கும் ஊடகவியலாளர்களில் பலரும் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.
உலகையே அச்சுறுத்தும் வைரஸ் தொற்றையும் தாண்டி செய்திகளை மக்களிடம் சேர்க்க இன்னுயிரை அளித்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட ஊடகவியலாளர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.இதில் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரிக்கும் அனைத்து ஊடக நண்பர்களும் முக கவசங்கள் அணிந்தும், சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்தி தகுந்த பாதுப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.