August 25, 2020
தண்டோரா குழு
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் மண்டல அலுவலகத்தில் கடையின் சாவிகளை ஒப்படைத்து பதாகைகளை ஏந்தியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்தும், அதன் சாவிகளை டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தும், அலுவலகம் முன்பு கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டம் முழுவதும் 300 கடைகளில், 170 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது.
இந்த நூதன போராட்டம் தொடர்பாக தொமுக மாநில துணை தலைவர் இரத்தினவேல் கூறுகையில்;-
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழந்த பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தையே டாஸ்மாக் வருமானம் தான் இயக்கி கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவில், அதன் பணி உள்ளது. எடப்பாடி அரசிற்கு வருமானத்தை தேடித்தரும், இந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா? என்றால் இல்லை. இதேபோல், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் வெற்றி பெற, அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொமுச போராட்டம் நடத்தும் என கூறினார்.
இந்த நூதன போராட்டத்தில், டாஸ்மாக் தொமுச தொழிற்சங்க தலைவர் ராக்கி, செயலாளர் தமிழ்ச்செல்வன், அரசு பணியாளர் சங்கம் புருஷோத்தமன், விற்பனையாளர் சங்கம் மதியழகன், எஸ்எசிஎஸ்டி பெடரேஷன் மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.