August 23, 2020
தண்டோரா குழு
கோவையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிய 13 வயது சிறுவனை ரோந்து பணியில் இருந்த காவலர் ஒருவர் லத்தியால் சரமாரியாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் அடுத்த சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், பிரதிக்ஷா தம்பதியினர்.இவர்களது 13 வயது மகன் யுவன் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான்.ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று தளர்வுகள் அற்ற 24 மணி நேர முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சாலையில் ரோந்து பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் யுவனை காவலர் ஒருவர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. விசாரித்தவர் பெற்றொரிடம் சொல்லி அறிவுரை கூறுவதற்கு பதில் லத்தியால் சரமாரியாக கை கால்களில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிறுவனின் கை கால்களில் ரத்த காய தழும்புகள் ஏற்பட்டு வீங்கியுள்ளன. சிறுவன் என்று கூட பாராமல் அடித்த காவலர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களை அடிப்பதை காவலர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறுவன் யுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் தற்போது வரை புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.