August 23, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி மற்றும் செயற்கை அவயங்கள் தயாரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
உலகை அச்சுறுத்தி வரும் (கோவிட் – 19) என்ற கொரோனா வைரஸ் நோயால் மிதமான அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு,ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 2.34 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா வங்கி ஒன்றை மாநில சுகாதாரத்துறை அமைத்தது.
இதன் தொடர்ச்சியாக கோவையிலும் பிளாஸ்மா வங்கி துவக்க பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் துவங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் தினத்தந்தி பத்திரிகையின் புகைப்பட கலைஞர் சுரேஷ் பிளாஸ்மா தானம் செய்தார்.இதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் சார்பில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை அவயங்கள் தயாரிப்பு நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி,மருத்துவமனையின் முதல்வர் காளிதாஸ்,தர மேம்படுத்தப்பட்ட முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவின் இயக்குனர் மருத்துவர் வெற்றிவேல் செழியன் என உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.