August 12, 2020
தண்டோரா குழு
பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியான திருக்கோவிலூர் மணி மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதேபோல் பாரத் சேனை நிர்வாகியான அருண் மீது ஏற் கனவே இது தொடர்பாக குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விருவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் குண்டர் சட்டத்தை நீக்க கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத்,
சிலை அவமதிப்பு விவகாரத்திற்குரிய வழக்கு என்னவோ அதனை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் மாறாக குண்டர் சட்டம் போடப்பட்டது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிராக ஆற்றப்பட்ட எதிர்வினை என்றும் அவர் கூறினார். அத்துடன் கோவில்கள் முன் கடவுளை இழிபடுத்துவது போன்ற வாசகங்களை பொறித்து பெரியார் சிலை வைக்கப்பட்டிருப்பது திமுகவின் அரசியல் சூழ்ச்சி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.