August 12, 2020
தண்டோரா குழு
இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்றுபேரை சிபிசிஐடி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலகத் தலைவன் அங்கொட லொக்கா இலங்கையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த நிலையில் அங்கிருந்து தப்பி தமிழகத்தில் பிரதீப் சிங் என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை காளப்பட்டி பகுதியில் வசித்து வந்த பிரதீப் சிங் என்ற நபர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மதுரையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் இலங்கையின் கொழும்பு நகரைச் சேர்ந்த அம்பானி தான்ஜி ஆகியோர் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியதன் பேரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதுரையில் தகனம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இலங்கையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவுக்கு பிரதீப் சிங் என்ற பெயரில் சிவகாமி சுந்தரி மற்றும் அமானி தான்ஜி ஆகியோர் வழக்கு பதிவு செய்ய ஆதார் அட்டை உள்ளிட்ட போலியான ஆவணங்களை தாக்கல் செய்தது தெரிய வந்ததை அடுத்து அமானி தான்ஜி, சிவகாமி சுந்தரி மற்றும் போலி ஆவணங்களை பெற உதவியதாக திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து கோவை, திருப்பூர், மதுரை,ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கொட லொக்கா தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க 5 நாள் அவகாசம் கோரி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த எட்டாம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. இதனை யடுத்து சிறையில் இருந்த சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன், அமானி தான்ஜி ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிபிசிஐடி போலீசார் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீகுமார் இன்று மதியம் 2 மணியிலிருந்து 15-ஆம் தேதி மதியம் 2 மணி வரை சிபிசிஐடி போலீசார் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இந்தநிலையில் கைதான மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.