August 10, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேம் சாகர் நாயக் (வயது 30). திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் இவர் தனது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவ மனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமானார். இதுகுறித்து பந்தய சாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.