August 8, 2020
தண்டோரா குழு
கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் கொரொனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை ஹிந்துஸ்தான் பெட்ரொலிய நிறுவனம்
கெளரவித்தது.
கோயமுத்தூர் இ எஸ் ஐ மருத்துவமனையில் 400 க்கும் மேற்பட்ட கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரைக்கும் 3500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று இ எஸ் ஐ கொரொனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை ஹிந்துஸ்தான் பெட்ரொலிய நிறுவனம் கெளரவித்தது.
தமிழகத்திலேயே சிறப்பான சிகிச்சையை இ எஸ் ஐ மருத்துவமனை வழங்கி வருவதை மத்திய அரசு இரு மாதங்களுக்கு முன்பு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.கோவை இ எஸ் ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் கொரொனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.கொரொனா வார்டில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை பாராட்டி ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் சார்பாக மருத்துவமனை வளாகத்தில் கெளரவித்தனர்.
கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தூய்மைப்பணியில் ஈடுபடும் 85 பெண்களுக்கு சேலையும், 85 ஆண்களுக்கு வேஸ்டி மற்றும் சர்ட்டுகள்,ஆளொன்றுக்கு 10 கிலோ காய்கறிகள், சோப்புகள் என 2 லட்சம் மதிப்பில் வழங்கினார்.இதுவரை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் முககவசம், மருத்துவர் பாதுகாப்பு உடை, தானியங்கி சானிடைசர் இயந்திரம், சானிடைசர், ஆகியவைகளை கொரொனா முன்கள போராளிகளான காவல் துறையினர் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பொது மேலாளர் தாமோதரன் தெரிவித்தார்.
இது குறித்து இ எஸ் ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் நிர்மலா கூறும்போது,
3500 நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாகவும், தற்போது 350 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.தூய்மைப்பணியாளர்களின் பணி மகத்தானது என்பதை உணர்த்தும் வண்ணம் இன்றைக்கு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். பொதுமக்கள் விழிப்போடு இருக்கவும் வலியுறுத்தினார்.