August 8, 2020
தண்டோரா குழு
கோவை தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி வட மாநில செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றனர். இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பெரிய தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. அதனை அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் விரட்ட முயன்றனர். அப்போது, மீண்டும் வடப்பகுதிக்குள் செல்வது போல் சென்றுள்ளது. இதனை நம்பிய தொழிலாளர்கள் மீண்டும் அறைக்கு வெளியே அமர்ந்துள்ளனர். அப்போது,எதிர்பாராம நேரத்தில் மீண்டும் செங்கல் சூளைக்குள் புகுந்த காட்டு யானை ஆக்ரோஷத்துடன் தாக்கியதில் ஒரிஷா மாநிலத்தை சேர்ந்த பாபுல் உசைன் என்ற 23 வயது இளைஞர் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை துரத்தி விட்டனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.துரதிஷ்டவசமாக தொழிலாளி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து கோவை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை தடாகம் பகுதியில் ஒற்றை காட்டு யானை தாக்கி செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.