August 6, 2020
தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான புதிய நவீன சிடி ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மூச்சுதிணறல், இருமல், சளி, காய்ச்சல், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்னை இருக்கிறது.இது போன்ற நபர்களுக்கு உடனடியாக சி.டி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது தினமும் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு சி.டி ஸ்கேன் எடுக்க வேண்டிய நிலையில் இங்கு ஒரே ஒரு சி.டி.,ஸ்கேன் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில், தமிழக அரசு நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன சி.டி ஸ்கேன் கருவியை வழங்கியுள்ளது.இதனை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காவல் ஆணையர் சுமித் சரண் மாநகராட்சி ஆணையாளர் சரவண்குமார் ஜதாவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.