August 5, 2020
தண்டோரா குழு
அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை அமைப்பதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து அங்கு கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ராமர் கோயில் கட்டுவதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கோயில் மாதிரி வரைபடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கோயில் கட்டப்படுகின்றது.
இதற்கிடையில், கோயில் கட்டுமான பணிகளை தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா இன்று நடத்த அறக்கட்டளை திட்டமிட்டது. இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில்,29 வருடங்களுக்கு பிறகு அயோத்தி சென்ற பிரதமர் மோடி,
அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார்.பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.
இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி,யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது.பின்னர்,ராமஜென்ம பூமிபூஜையில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியில் செய்யப்பட்ட செங்கல்லை அடிக்கல் நாட்டினார். ரூ. 300 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த கோவில் மூன்றரை ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது