August 4, 2020
தண்டோரா குழு
கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரில் வெண்நுரை கிளம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள போத்தனூர் சாய் நகர் பகுதியில் துர்நாற்றத்துடன் வெண்நுரை கிளம்பியது.
இந்த நிலையில் காற்றில் பறந்த நுரை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி வாசிகள் ஆற்றில் கழிவுநீர் கலப்பதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இவ்வாறு வெண்நுரை கிளம்புவதாகவும், இது போன்று நுரை கிளம்புவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவித்தனர்.நொய்யல் ஆற்றில் வெள்ளை நுரையுடன் கழிவுப்படலம் படர்ந்துள்ளதை பலர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.