August 3, 2020
தண்டோரா குழு
விவசாய நிலங்களையும் உணவு உற்பத்தி உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க கூடிய சட்ட திருத்தங்களை நிறைவேற்ற கூடாது என தலையில் முண்டாசு கட்டிகொண்டு விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது நூதன முறையில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு 10க்கு மேற்பட்ட விவசாயிகள் புகார் மனு அளிக்க வந்தனர். 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய புகார் மனுவை அளித்தனர். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார வரைவு சட்டம் திருத்தங்கள் விவசாயிகளுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் இரத்து ஆகும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் அவசர சட்டம், விவசாயிகளின் விளை பொருட்களான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு பாதுகாப்பு அவசர சட்ட திருத்தங்கள் விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் உணவு உற்பத்தி பெரியளவில் பாதிக்க கூடிய நிலை இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசு விவசாயிகளிடம் அதில் உள்ள குறைகளை கேட்டறிந்து சரிசெய்ய வேண்டும் என்கிறார்கள். மேலும் எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் உதவிட கோரிக்கை விடுத்தனர்.