July 29, 2020
தண்டோரா குழு
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைந்த பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில்
ஜூலை 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பின்பற்ற வேண்டிய மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு தொடரும். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூட்டங்கள் செயல்பட அனுமதி; பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை இயங்காது; திரையரங்கம், மதுக்கூடங்கள் செயல்பட தடை நீடிக்கும்.இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்கான தடை விலக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களிலும் மக்கள் வெளியில் நடமாடலாம். மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், மெட்ரோ ரயில்கள்,கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை தொடரும்.
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி; இ-பாஸ் தேவையில்லை.65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள்,10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சர்வதேச விமான பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி; நாடு முழுவதும் குறைந்த அளவில் உள்நாட்டு விமானங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.