July 29, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று திமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிக்குடங்களுடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவை மாநகராட்சியில் கடந்த சில தினங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது பல இடங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறையும்,வாரம் ஒரு முறையும் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திக் பீளமேட்டில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி, காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது பீளமேடு பகுதியில் எம்.எல்.ஏ வீட்டின் அருகில் உள்ள பொது மக்களும் காலிக்குடங்களுடன் அவரவர் வீடடுகளின் முன்பு காலி குடங்களுடன், கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேட்டியளித்த எம்.எல்.ஏ கார்த்திக்,
குடிநீருக்காக கோவையில் பொது மக்கள் இவ்வளவு பாதிப்புக்களை சந்தித்தது இல்லை என தெரிவித்தார்.முறையாக குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதற்கு உள்ளாட்சி துறையே காரணம் எனவும், தொலை நோக்கு பார்வையோடு செயல்படாததே குடிநீர் பிரச்சினைக்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
2018 ல் சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆணடு குடிநீர் ஒப்பந்தம் வழங்கிய நிலையில் , ஒப்பந்தம்போட்டு 3 ஆண்டுகளாகியும் உட்கட்டமைப்பு எதுவும் சூயஸ் நிறுவனம் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
சூயஸ் நிறுவனம் என்ன பணிகள் செய்து இருக்கின்றது என்பதையும், கோவை மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட காரணம் குறித்தும் மாநகராட்சி நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் விளக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.