July 18, 2020
தண்டோரா குழு
கேரளாவில் இருந்து இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றிச் சென்று மோசடியில் ஈடுபட்ட வாகனம் கோவையில் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஹாலிடேஸ் மற்றும் பிரதர்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தினர் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக கேரளாவில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து கேரளாவுக்கும் கோவை வழியாக உடனடியாக இ பாஸ் பெற்று தருவதாக கோரி மாறாக ஆந்திராவிலிருந்து எர்ணாகுளத்துக்கு மட்டுமே பாஸ் பெற்று பாலக்காடு ,கோவை சேலம், திருப்பூர் ஆகிய தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகப்படியான பணம் வசூல் செய்தும் சென்னை உட்பட தமிழகத்தின் கோவை, சேலம் ,திருப்பூர், பாலக்காடு போன்ற மற்ற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாக மேற்படி டிராவல்ஸ் நிறுவனத்தினரின் விளம்பரத்தை பார்த்து தகவலின் படி இன்று கோவை மாவட்டம் க.க சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மேற்படி டிராவல்ஸ் நிறுவனத்தினர் உடன் மலையாளம் தெரிந்த ஒரு நபரை தொலைபேசியில் பேச வைத்து அவரை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படி டிராவல்ஸ் நிறுவனத்தில் கோவை மாவட்டம் க.க சாவடி எட்டிமடை பிரிவில் ஏறி கொள்வதாக தகவல் தெரிவித்து டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் முஹம்மது ஷபத்
வண்டியை ஓட்டி வர அதை க.க சாவடி காவல் உதவி ஆய்வாளர் நிறுத்தி சோதனை செய்தும் பின்பு ஓட்டுனர் முஹம்மது ஷபத்தை கைது செய்து வண்டியை கைப்பற்றி க.க.சாவடி காவல் நிலையம் கொண்டு வந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற ஏமாற்று வேலைகளை தடுக்க அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ்நாடு மாநில இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.