July 18, 2020
தண்டோரா குழு
கோவையில் மூன்று கோவில்களில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டவுன்ஹால் பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் மரம் நபர் டயரை எரித்து கோவிலுக்குள் வீசும் சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரையில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த உக்கடம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறை விசாரணையில் தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் மாகாளியம்மன் கோவிலின் அருகிலுள்ள டயரை எடுத்து , எரித்து கோவிலின் கூரையை பற்ற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மேலும் இதே போல ரயில்நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.மேலும் நல்லாம்பாளையத்திலுள்ள செல்வ விநாயகர் கோவிலில் உள்ள பழைய துணிகள் மற்றும் பழைய பொருட்களை மர்ம நபர்கள் எரித்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நேற்று பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும் முன் கோவில் முகப்பில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக இன்று மூன்று கோவில்களில் மர்ம நபர்கள் தீ வைத்ததை தொடர்ந்து ,கோவையில் இன்றைக்கு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.