July 10, 2020
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக,இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 5 மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை வாட்ஸ் ஆப் காணொலி காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு கண்காணிக்கும் புதிய திட்டத்தினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத்
துவக்கி வைத்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:
கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்களின் வீடுகளில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறையினை சரிவர பின்பற்றாமல் செயல்படுவதாக வரப்பெற்ற தகவல்களை தொடர்ந்து,அதனை தவிர்க்கும் விதமாக அவர்களின் அலைபேசி எண்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்ற விபரங்களைக் கொண்டு வாட்ஸ் ஆப் காணொலி காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட மாநகராட்சியின் 5
மண்டலங்களிலும் ஆசிரியர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 22 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது.இப்பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தாவசியப் பொருட்கள், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்,பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் அனைத்து விதமான மருத்துவ உபகரணங்களை முறையாக காகிதப்பைகளில் சுற்றி அதனை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் உள்ள சிவப்பு
நிறப்பைகளில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்துவரும் பொதுமக்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும்போது உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வேலையாட்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வரும்பொழுது வெப்ப பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலுள்ள பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் மாலை நேரங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும்,மின்தூக்கிகள், படிக்கட்டுகளின் கைப்பிடிகள் போன்றவற்றை தினசரி
கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில்
வெளியே சென்று பொருட்கள் வாங்குவதை தவிர்த்து கூடுமானவரை திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் பொருட்களை வாங்கி கூட்டத்தை தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் 1077, 0422 1077, 0422 1077, 0422-2302323, 9750554321