July 7, 2020
தண்டோரா குழு
கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டன.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்கள் கடந்த மூன்று மாதங்களுகும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், அண்மையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு, வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் காணொளி காட்சி வாயிலாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்,கோவை நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதி ஒருவரின் உறவினர் அயல்நாட்டிலிருந்து வந்திருந்த நிலையில் அந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனோ உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,பாதிக்கபட்ட நபருடன் தொடர்பில் இருந்த நீதிபதி உட்பட அவருடன்தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.மூன்று நீதிபதிகள் மற்றும் ஒரு பணியாளர் என நான்கு பேருக்கு மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஒரு நீதிபதிக்கு தொற்றானது இன்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் தொற்று ஏற்பட்ட நீதிபதியுடன் பணியாற்றும் இரண்டு நீதிபதிகள் உட்பட நீதிமன்ற பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நீதிமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, விரைவு நீதிமன்றம் 1, விரைவு நீதிமன்றம் 2, நடுவர் நீதிமன்றம் 6 ஆகிய மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டன. கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டன.