July 6, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் முதல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் வரை இருந்த நிலையில், ஜூலை மாதமும் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்,ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வருகிற நவம்பர் மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர்
காமராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூலை 31 வரை சில தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டதை போலவே இம் மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் 3 ஆம் தேதி வரை ரேஷனில் பணம் கொடுத்து பருப்பு, எண்ணெய், சர்க்கரையை விலைக்கு வாங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு, அடுத்த மாதம் அவை விலையில் ஈடு செய்யப்படும். இக் குடும்ப அட்டைதாரர்களுக்கு செல்பேசியில் இதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவர்கள் இம் மாதத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை நியாயவிலை கடைகளில் மீண்டும் சென்று இம்மாதமே பெற்றுக்கொள்ளலாம்.
நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி கூடுதலாக வழங்கப்படும். ஜூலை மாத அளவின்படி நவம்பர் வரை அரிசி இலவசமாக வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.