July 4, 2020
தண்டோரா குழு
கோவையில் ஒரே நபரால் 40 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசா மணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளும், முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் சுகாதாரத்துறை, காவல்துறை வருவாய்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் தொடர் களப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து நடைபெற்று வரும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த மே மாதம் இறுதிவரை கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏவருமில்லை என்ற சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதனால், ஊரடங்கு காலத்திலும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் பெருமளவில் இல்லாத நிலையில் தொழில்துறையினர், வணிக நிறுவனங்கள், பல்வேறு கடைகள் ஆகியவற்றிற்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றது. மருத்துவம், திருமணம் போன்ற தவிர்க்க இயலாத காரணங்களுக்கு மாவட்டத்திற்குள் வந்து இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்,கடந்த மாதம் கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று, வைரஸ் தொற்றுடன் அனுமதி பெறாமல் மாவட்டத்தினுள் நுழைந்தது மட்டுமின்றி, தனக்கு தொற்று இருப்பதை அறியாமல் பல்வேறு பகுதி சென்று வந்துள்ளார். பின்னர், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், அந்த நபரின் மூலம் 40-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதி முழுமையும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதுபோலவே, கடந்த மாதம் கோவை பீளமேடு, மசக்காளிபாளையம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் கணேஷா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஐவுளிக்கடையில் பணியாற்றிய சிலருக்கு பரிசோதனை செய்தபோது, ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அந்நிறுவனம் மூடுவதற்கு உத்திரவிடப்பட்டது. அத்துடன், அங்கு பணியில் இருந்தவர்கள், ஐவுளிக்கடைக்கு சென்று வந்தவர்கள் என பலருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 45 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அந்த ஐவுளிக்கடை செயல்பட்டு வந்த தெருக்களும், அங்கு பணியாற்றியவர்கள் தங்கியிருந்த விடுதிகளும் மூடப்பட்டு வெளிநபர்கள் செல்லவும், அங்கு வசிப்பவர்கள் வெளியில் வரவும் தடைவிதித்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதலால், கணேஷா சில்க்ஸ் ஐவுளிக்கடைக்கு கடந்த ஒருமாதமாக, கோவை மாவட்டம் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களிலிருந்து பலரும் கடந்த ஜூன் மாதத்தில் வந்து சென்று உள்ளனர் என தெரியவந்துள்ளது.
எனவே, மசக்காளிபாளையம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் கணேஷா டெக்ஸ்டைல்ஸ் ஐவுளிக்கடைக்கு வந்து சென்ற அனைவரும் தங்களைத் தாங்களே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், சளி போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தாமாக முன்வந்து தங்களின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனையினையோ அணுகி தவறாது கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் இதுபோன்றதொரு பேரிடர் காலத்தில் எவ்வித அவசியமற்ற காரணங்களுக்கும் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்திடுவதுடன், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற சுய ஒழுக்கங்களை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். அரசின் அறிவுறைகளை பின்பற்றாமல், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வகையில் செயல்படும் கடைகள், நிறுவனங்கள் மீதும், அவற்றின் உரிமையாளர்களின் மீதும் வழக்கு பதிவு செய்யவும், உடனடியாக மூடி முத்திரையிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றிணைந்து மக்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.