July 2, 2020
தண்டோரா குழு
கோவையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் ஜவஹர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் முத்துராஜன் கூலி வேலை செய்துவரும் இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.இதில் ஒரு மகனுக்கு திருமணம் ஆகி மருமகள் பவித்ரா மற்றும் கைக்குழந்தையுடன் இங்கு குடியிருந்து வருகிறார். முத்து ராஜன் மற்றும் மணிமேகலைக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் நேற்றும் இருவரும் சண்டை போட்டுள்ளனர்.இதில் கோபம் அடைந்த முத்துராஜ் நள்ளிரவில் மனைவி மணிமேகலை மற்றும் மருமகள் பவித்ரா அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் வெளியில் இருந்து கல்லை எடுத்து வந்து மனைவி மணிமேகலையின் தலையில் போட்டு போட்டுள்ளார்.இதில் மணிமேகலை ரத்தவெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து முத்து ராஜன் ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த மஞ்சள் சாயத்தை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு படுத்துவிட்டார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து பவித்ராவின் குழந்தை அழும் சத்தம் கேட்டு பவித்ரா எழுந்து பார்த்தபோது அருகில் அவரது மாமியார் மணிமேகலை ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த அவரது மாமனார் முத்துராஜ் கேட்டபோது தான்தான் கல்லைப்போட்டு மனைவியை கொன்றதாகவும் தானும் மஞ்சள் சாயம் குடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த வீட்டாரை அழைத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார் ஆனால் 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் முத்துராஜ் இறந்துவிட்டார். இதையடுத்து துடியலூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தடய அறிவியல் துறையின் முத்துராஜ் மற்றும் மணிமேகலை உடல்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருமகள் பவித்ரா மற்றும் அக்கம் பக்கத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.