July 1, 2020
தண்டோரா குழு
16 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி காணாமல் போனதாக கடந்த 28ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுமியும் கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற இளைஞரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தது தெரியவந்தது. இது குறித்தான விசாரணையில் ஹர்ஷாத் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கோவையில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து ஹர்ஷதை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் ஹர்ஷாத் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.