June 29, 2020
தண்டோரா குழு
துபாயில் இருந்து விமானத்தில் கொச்சின் வந்த 50 தமிழர்கள் வாளையார் செக்போஸ்ட்டில் சிக்கி தவிக்கின்றனர். போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.
கொரானா ஊரடங்கு காரணமாக தமிழகம் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்து வருகின்றனர். மருத்துவ அவசரம், இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் இ-பாஸ் அளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. மற்றவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடந்த நான்கு மாதங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் உணவுக்கே திண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 50 பேர் நேற்று விமானத்தில் கொச்சின் வந்தனர். அங்கிருந்து காரில் தமிழக எல்லையான வாளையார் செக்போஸ்ட் வந்தனர். கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்தனர்.
இது குறித்து துபாயில் இருந்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அருள்மணி(30) என்பவர் கூறியதாவது:-
துபாய் மற்றும் சவுதியில் இருந்து கோவை, சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த 50 பேர் நேற்று மதியம் கொச்சின் வந்தோம்.பின்னர் அங்கிருந்து காரில் வந்தபோது வாளையார் செக் போஸ்டில் போலீசார் சோதனை செய்தனர். எங்களிம் இ-பாஸ் கிடையாது. துபாயிலிருந்து தமிழகத்துக்கு வர அனுமதி கிடைக்காததால் துபாயில் உள்ள தமிழ் மன்றம் மற்றும் நண்பர்கள் உதவியுடன் கொச்சின் வர ஏற்பாடு செய்தனர். ஆனால் வாளையார் செக் போஸ்டில் எங்களை உள்ளே விட அனுமதி மறுக்கின்றனர். அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது பாஸ்போர்ட் மற்றும் விமான டிக்கெட்டை காண்பித்து செல்லுமாறும், பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று மாலை 5 மணி முதல் காத்துக் கிடக்கின்றோம்.எங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக எல்லையான வாளையார் செக் போஸ்ட்டில் 50 தமிழர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.