June 28, 2020
தண்டோரா குழு
தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக திரைப்பிரபலங்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி பதிவிட்டு வருகின்றன. இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,சாமி’,’சிங்கம்’,’சிங்கம் 2′, ‘சிங்கம் 3’, ‘சாமி ஸ்கொயர்’ எனக் காவல்துறையை மையமாக வைத்துப் படம் இயக்கிய இயக்குநர் ஹரி இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்”.
இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.