“தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பின் கீழ் அமைய இருப்பது கோயம்புத்தூரில்தான்” என்று கோவை மாவட்ட போக்குவரத்துக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.
கோவை மாநகரில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். உலக அளவில் ஜவுளி, மின் மோட்டார்கள், பம்புகள், வாகன உதிரி பாகங்களின் இரும்பு எஃகு மற்றும் அலுமினியம் வார்ப்புகள் என பொருட்களின் ஏற்றுமதிக்கும் இந்திய அளவில் தொழில்துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நகரமாகவும் கோவை திகழ்கிறது.
கோவை மாநகரம் சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சிறு நகரம்தான். இந்த சிறு நகரத்திற்குள்தான் ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், காவல்துறை ஆணையாளர் அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, கல்விக்கூடங்கள், திரையரங்கங்கள், மாநகராட்சி கலையரங்கம், சின்னக் கடைவீதி, பெரிய கடைவீதி, காய்கறி மார்க்கெட், மீன் மார்கெட் என அனைத்து முக்கியமான இடங்களும் மக்கள் திரளாக வந்து செல்லும் அனைத்தும் இந்த பத்து கிலோ மீட்டருக்குள் அடங்கும்.
மாநகரில் கடந்த பத்தாண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப சாலை விபத்துகள், போக்குவரத்து விதிமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. முக்கிய சாலை சந்திப்புகளான அவினாசி சாலை, திருச்சி சாலை, உக்கடம், ஒப்பணக்கார வீதி, மேட்டுப்பாளையம் சாலை என முக்கிய சந்திப்புகள் அதிகமான போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாகவும் விபத்து நேரும் இடங்களாகவும் இருக்கின்றன. இதற்குத் தீர்வு காணும் வகையில் கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சில வருடங்களுக்கு முன் பல லட்சம் செலவில் நகரின் முக்கிய சிக்னல்களில் சிசிடிவி கேமரா என்ற கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கோவை மாநகர காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிக்னலில் வைக்கபட்டிருக்கும் சிசிடிவி மூலம் கோவை மாநகரையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் மாநகர காவல்துறையினர்.
இது குறித்து கோவை மாவட்ட போக்குவரத்துக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:
கோவை மாநகரில் 70 சிக்னல்கள் உள்ளன. ஒரு சிக்னலுக்கு 5 சிசிடிவி கேமராக்கள் வீதம் நகரில் உள்ள அனைத்து சிக்னலிலும் தற்போது கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றைக் கண்காணிப்பதற்காக கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் தொழில்நுட்பங்கள் கூடிய நவீனக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை முக்கிய சந்திப்புகளில் உள்ள 22 சிக்னல்களில் 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி நகரில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்கள், அங்காடி வளாகங்கள், விற்பனைக் கூடங்களில் அவர்கள் வைத்திருக்கும் கேமராக்களையும் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து வருகிறோம்.
இன்னும் 2 மாதங்களில் மாநகரில் உள்ள அனைத்து சிக்னல் கேமராக்களை இணைக்கும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும். இதன் மூலம் கோவை மாநகரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். இதனால் நகரில் ஏற்படக்கூடிய திருட்டு, சங்கிலிப் பறிப்பு போன்ற குற்றச் செயல்களைச் செய்வோர் எளிதில் பிடிபடுவார்கள். அதைப் போல் நகரில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் விரைவில் தடுக்கப்படும். விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் எளிதில் கண்டறியப்படும். மேலும், தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒரே காவல்துறை கட்டுபாட்டில் வருவது இதுவே முதல் முறையாகும் என்றார் சரவணன்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்