June 17, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஆரம்பத்தில் 146 கொரோனா பாதித்த நிலையில் 144 குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கோவையில் சுமார் 25 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இந்த சூழலில் தற்போது கோவையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த, சூலுாரை சேர்ந்த 45 வயது ஆண், துடியலூரை சேர்ந்த 20 வயது பெண், போத்தனுாரை சேர்ந்த 28 வயது பெண் மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த 32 வயது பெண் ஆகிய நான்கு பேருக்கும், தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்த செல்வபுரத்தை சேர்ந்த 36 வயது ஆண், ஒண்டிப்புதுாரை சேர்ந்த 27 வயது ஆணுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதைபோல், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த,சூலுாரை சேர்ந்த 42 வயது ஆண், இடையர்பாளையத்தை சேர்ந்த 41 வயது ஆண், பொள்ளாச்சியை சேர்ந்த 60 வயது ஆண், ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த 54 வயது ஆண், என்.ஜி.ஜி.ஓ.,காலனியை சேர்ந்த 50 வயது ஆண், சூலுாரை சேர்ந்த 48 மற்றும் 18 வயது பெண்கள், சோமையம்பாளையத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஐ.எல்.ஐ.,வார்டுக்கு சிகிச்சைக்கு வந்த, சங்கனூரை சேர்ந்த 24 வயது ஆண், சிறுமுகையை சேர்ந்த 51 வயது பெண் மற்றும் வடவள்ளியை சேர்ந்த 74 வயது மூதாட்டி, பெ.நா.பாளையத்தை சேர்ந்த 34 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அரக்கோணத்தில் இருந்து ரயில் மூலம் கோவை வந்த, பீளமேட்டை சேர்ந்த 46 வயது ஆண் மற்றும் 13 வயது சிறுவனுக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதைபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தார். இவருடைய குடியிருப்புக்கு அருகில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த, 7 பெண்கள்,14 மற்றும் 12 வயது சிறுமிகள், 34, 20 வயது ஆண்கள் என மொத்தம் 11 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், கோவையில் ஒரேநாளில் 31 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 29 பேர் இ.எஸ்.ஐ.,இருவர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். எனினும், ஏற்கனவே பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த திருநங்கை உள்பட 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த 93 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.