June 17, 2020
தண்டோரா குழு
கோவையில் பல இடங்களில் கைவரிசை காட்டிய பலே திருடர்களை 2 பேரை துடியலூர் போலிசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.
கோவையில் பல இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடப்பதாகவும் குறிப்பாக காங்கிரட் போட பயன்படுத்தும் செண்ட்ரிங் சீட்கள் திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துவண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரின் துடியலூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை துடியலூர் பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வண்டி முழுவதும் செண்டரிங் சீட்கள் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. லாரியில் வந்த இருவரிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலிசார் அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் லாரியை ஓட்டிவந்த காஜா உசேன் மற்றும் உடன் வந்த ரமேஷ் அந்தோணி ஆகிய இருவரும் கோவையில் பல இடங்களில் செண்ட்ரிங் சீட்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி விற்றுவந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட 7 காவல்நிலையங்களில் 8 வழக்குள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 15 லட்சம் மதிப்புள்ள செண்ட்ரிங் சீட்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டனர்.