June 17, 2020
தண்டோரா குழு
இந்திய எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சீன கொடியை எரிப்பது உள்ளிட்ட செயல்களின் மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரசன்ன சுவாமிகள் தலமையில் அங்கு வந்த அக்கட்சியினர் சீன ராணுவத்தினரை கண்டித்தும், அந்நாட்டின் அத்துமீறலுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி,கொள்கை பரப்பு செயலாளர்,
திருமுருகனார்,இளைஞரணி செயலாளர்
சிடி கண்ணன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
இதேபோல் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு சீன ராணுவத்தினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் பைராகி சுவாமிகள் தலைமையில் அங்கு வந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர், மத்திய மாநில அரசுகள் சீன பொருட்கள் விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் சீனாவுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அப்போது சீன கொடியை கிழித்தும், செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் வெளிப்படுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.