June 13, 2020
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவதாக குழந்தையை கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூரைச் சேர்ந்த செல்வராணி, செல்வம் என்ற தம்பதியினர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவம் முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்றைய தினம் இரு ஆண் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக திருப்பூரிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த 25 மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி செல்வராணியிடம் இருந்த ஒரு ஆண் குழந்தையை எடை போட வேண்டுமென்று வாங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண்மணியை காணவில்லை,
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவல் துறைக்கு தகவல் அளித்த பின் அங்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் துணை காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணியை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் குழந்தையை நூதன முறையில் கடத்தி சென்றது மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.