June 11, 2020
தண்டோரா குழு
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமான பயணிகள் 176 பேருக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என வந்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25முதல் இந்தியாவில் விமான சேவை தடை செய்யப்பட்டது. இதனால், பல நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே துபாயிலிருந்து இந்தியர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் 176 பேர் கொண்ட விமானம் 10ஆம் தேதி அழைத்து வரப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 176 பேருக்கு கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்டது. ஆண்கள் 114 பேரும், பெண்கள் 58 பேரும், 3 சிறார்கள், 1 கைக்குழந்தை இதில் அடக்கம். இதில், 120 பேர் அரசின் ஏற்பாட்டின் கீழ் உள்ள பராமரிப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களை சேர்ந்த மீதம் 56 பேரில், கர்பினிகள், நோயாளிகள் மட்டும் அவரவர் விருப்பத்தின் பேரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்த முதற்கட்டமாக அழைத்து வரப்பட்ட 176 பேருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.