June 11, 2020
தண்டோரா குழு
கோவையில் ஆதரவற்ற நிலையில் மயானத்தில் இருந்த மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்த்து பாதுகாப்புபடுத்திய தமுமுக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஆதரவற்ற முதியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக இந்த ஆதரவற்ற முதியவர்கள் கோவை அரசு மருத்துவமனை வெளிபுற வளாகத்தை மையப்படுத்தி கைவிடப்பட்டு செல்கின்றனர். இப்படி கைவிடப்பட்ட முதியவர்கள் சாலையோரங்களில் படுத்துக்கொண்டு கிடைத்த உணவை உண்டு தங்களின் வாழ்வை கடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் மனிதநேயமற்ற கொடும் சிந்தனை கொண்ட மனிதர்களால் மலையடிவாரங்களிலும் முதியோர்கள் விடப்பட்ட சம்பவங்கள் கோவையில் அரங்கேறியுள்ளது.
அந்த வகையில் கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள மயானத்தில் மூதாட்டி ஒருவரை விட்டுச் சென்ற சம்பவம் மனிதநேயம் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைதொடர்ந்து அருகில் உள்ளவர்கள் மூதாட்டிக்கு தங்களால் முடிந்த உணவு பொருட்களை கொடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் இந்த மூதாட்டியை பாதுகாப்பு படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமுமுக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வந்த தமுமுக நிர்வாகிகள் மூதாட்டியை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு ஆர்எஸ் புரத்தில் உள்ள மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதித்தனர். இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.