June 9, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கோவைக்கு வெளியூரிலிருந்து வரக்கூடியவர்கள் வாயிலாக கொரனா தொற்று ஏற்பட தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தொடங்கி மாஸ்க் அணிவது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக மாஸ்க் போட்டாமல் வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை மற்றும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கோவை மாநகராட்சியில் இதுவரை 4,00,000 ரூபாய் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதமாக வசூல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் ஊரடங்கிற்கு பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை பந்தய சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே, நடைபயிற்சி மேற்கொள்ளும் பலர் முக கவசம் அணிவது இல்லை எனவும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை எனவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மறு அறிவிப்பு வரை கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கோவையில் மீண்டும் கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று பந்தய சாலையில் அதிகாரிகள் பாதாகைகள் வைத்துள்ளனர்.