June 9, 2020
தண்டோரா குழு
விழுப்புரத்தில் இருந்து கோவை வந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் சென்று வந்ததாக தெரிகிறது. வெளிமாவட்டம் சென்று வந்ததால் அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்த கோவை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரிடம் சளி மற்றும் இரத்த மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றனர். இந்நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவரை மேல் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில் அவர் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. அங்கு வசித்து வரும் சுமார் 22 குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துத்துள்ளதால் குடியிருப்பில் இருந்து யாரும் வெளியே செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.