June 7, 2020
தண்டோர குழு
கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாததால் ஊரடங்கு உத்தரவு போன்றவற்றால் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது.இதனால் பள்ளி,கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.எனினும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றன. இதற்கிடையில்,இந்தக் காலகட்டத்தில் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர்கள் குருபர விஜய், அருணா தம்பதியினர்.இந்த தம்பதியினரின் ஹசிநிஹா, ஹர்ஷித் விஜய் ஆகிய ஆண், பெண் என இரட்டை குழந்தைகள்அதே பகுதியிலுள்ள பி.எஸ்.பி.பி மில்லேனியம் என்ற சி.பி.எஸ்.இ பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனாவால் இந்த பள்ளி ஆன்லைன் வாயிலாக கடந்த 1ஆம் தேதி முதல் வகுப்புகள் எடுக்கவுள்ளதாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,அதற்காக பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் அப் குழு துவங்கப்பட்டு,ஆன்லைன் வகுப்புகளுக்கான லாகின் ஐ.டி.,பாஸ்வார்டு ஆகியவையும் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், 1ஆம் தேதி ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்ட சில மணி நேரங்களில், இவர்களின் இரட்டை குழந்தைகள் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், பெற்றோர்கள், ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் அப் குழுவிலிருந்து அருணாவும் நீக்கப்பட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அருணா, இரு சம்பவங்களுக்கான காரணங்கள் குறித்து அறிய பல வகைகளில் பள்ளியை தொடர்புக்கொண்டும் எந்தவித விளக்கமும் கடந்த 4நாட்களாக பெறப்படாததுடன்,தற்போது எந்தவித விளக்கமுமின்றி தங்களின் இரட்டை குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக வேதனை தெரிவிக்கிறார் அருணா.
மேலும்,அந்தப் பள்ளியில் படிக்கும் பெற்றோர்களுக்காக ஒரு வாட்ஸ்அப் குழு இருந்தது. அதில், பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன செய்தியைப் பகிர்ந்தேன் அதற்காக தான் என்னை வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கியும் என் குழந்தைகளை பள்ளியில் இருந்தும் நீக்கியுள்ளனர். இதனால், எங்களின் குழந்தைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர். மேலும், பல மாணவர்களை எந்தக்காரணமும் சொல்லாமல் பள்ளியை விட்டு நீக்கிவிட்டனர் என்றார்.
அருணா மட்டுமின்றி சுமார் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதேபோன்று எந்தவித காரணமுமின்றி குழுவிலிருந்து நீக்கப்பட்டு, குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதிக்காமல்,பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறுகிறார் இந்த குழநதைகளின் தந்தை குருபர விஜய்.ஏற்கனவே,பொது முடக்கத்தால் வேலையிழப்பு, ஊதிய குறைப்பு ஆகிய காரணங்களால் செய்வதறியாமல் உள்ள பெற்றோகளிடையே,பள்ளியின் இந்த செயல் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி பிஞ்சு குழந்தைகளுக்கு மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார்.
ஒழுக்கம்,படிப்பு என பல தளங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த தங்களின் குழந்தைகளை மிகவும் பாதித்த இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க பெற வேண்டியது பெற்றோர்களான எங்கள் கடமை என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளி முதல்வர் ஹேமலதா சேஷாத்ரி கூறுகையில்,
பெற்றோர்கள் பள்ளி கட்டணம் வசூலிப்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு அதிக வேலையுடன் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதால் பெற்றோர்கள் கூட இருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து விருப்ப மில்லாதவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்கவேண்டாம் என நிர்வாகம் கூறியதை அடுத்து பத்து பெற்றோர்கள் குரூப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர்களை தங்களது குழந்தைக்கு ஆன்லைன் வகுப்பு எடுக்க கேட்கின்றனர். பள்ளி முதல்வர் விருப்பமில்லாதவர்களுக்கு எப்படி எடுப்பது என பள்ளி முதல்வர் நம்மிடமே கேள்வி எழுப்பினார்.