June 4, 2020
தண்டோரா குழு
கோவை மதுக்கரையில் மதராசாவில் பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் இஸ்லாமிய குழந்தைகள் குரான் பயிலும் மதராசா செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக மதராசா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு அப்பள்ளியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. மேலும் லைட்டுகளும் போடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதராசாவிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் உள்ளே இருந்த ஃபேன், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த குரான் புத்தங்களை சேதப்படுத்தி தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பின் அங்கு வந்த போலீஸார் தடயங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆய்வாளர்கள் சுசீலா, அன்புச்செல்வி, உதவி ஆய்வாளர்கள் திருமலைச்சாமி, HC சுந்தரமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சாதாரண உடையில் விசாரணை மேற்கொண்டதில் 2ம் தேதி அன்று மாலை மதரஸாவில் பயிலும் மூன்று இளம் சிறார்கள் அரபிக் ஆசிரியர் (இமாம்) சையது முகமது தங்களை பாடம் படிக்கச் சொல்லி திட்டுவதாலும் கடினமாக நடந்து கொள்வதாலும் விரக்தி யடைந்து மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.
விசாரணையில் தெரியவந்த
சங்கதியை பேரூர் உட்கோட்ட காவல்
துணை கண்காணிப்பாளர் மதரஸாவின் பொறுப்பாளர் அப்பாஸ், செயலாளர் அப்துல்
அக்கீம் ஆகியோருக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து மதரஸா இளம் சிறார்கள் ஆசிரியர் மீது உள்ள விரக்தியில் பின்விளைவு அறியாமல் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாலும், சேத மதிப்பு
ரூபாய் 50/-ற்குள் உள்ளதாலும் புகார்தாரர் அப்பாஸ் முஸ்லீம் தலைவர்களுடன் ஆலோசித்து விட்டு தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் வழக்கில் மேல் நடவடிக்கை கைவிட கோரியும் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலை தளங்களில் சமூக நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் தேவையில்லாத வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என கோவை மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.