June 4, 2020
தண்டோரா குழு
கோவையில் தனியாக வீட்டில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தர முயன்ற கால் டாக்ஸி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்கநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் காந்திநகர் மூன்றாவது வீதியில் வசித்து வரும் வெள்ளிங்கிரி என்பவரது மகன் சுதர்சன் (30), கால்டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுதர்சன் நேற்றிரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள குடிசைப்பகுதிக்கு சென்ற சுதர்சன், அப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் நுழைந்து, தனியாக தூங்கிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை தர முயன்றுள்ளார். இதனைக் கண்ட அப்பெண் செய்வதறியாது பயத்தில் கதறியுள்ளார்.
கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டதால் சுதர்சன் ஓடி ஒளிந்து மறைந்து கொண்டார். இது குறித்து அந்தப் பெண்ணின் வீட்டார் சிங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான காவல்துறையினர் ஒளிந்து கொண்டிருந்த சுதர்சனை பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுதர்சன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தர முயன்றது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதர்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காந்தி நகர் பகுதியில் சுதர்சன் மூதாட்டி உட்பட பல பெண்களுக்கு பாலியல் தொல்லை தர முயன்றதாகவும் மேலும் கொலை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சுதர்சன் மீது உள்ளதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.