May 29, 2020
தண்டோரா குழு
சூலூரில் மர அறுவை இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கலங்கல் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்.( வயது 35 ).சொந்தமாக மர அறுவை மில் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கல்பனா ( வயது 23 ).இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.காதல் திருமணம் செய்துள்ளனர். கல்பனா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவனும்,மனைவியும் தங்களுக்கு சொந்தமான மர அறுவை மில்லில் பணியாற்றுவது வழக்கம்.இன்றும் வழக்கம் போல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தர்மராஜ் வேறு ஒரு வேலைக்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது, கல்பனா மர அறுவை இயந்திரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்துள்ளார்.இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக கல்பனாவின் தலை மர இயந்திரத்தில் சிக்கி துண்டாகி சம்பவ இடத்துலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கல்பனாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த கல்பனாவின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,இருவருக்கும் திருமணமாகி 1 1/2 வருடமே கடந்துள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.மர அறுவை இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி 5 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.