May 29, 2020
தண்டோரா குழு
கோவையில் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக வாடிக்கையாளர்களிடம் கடன் தொகை வசூலிப்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கோவை பந்தைய சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பொது மக்கள் கடன் பெற்றுள்ளனர். இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக தவணை தொகை செலுத்த ரிசர்வ் வங்கி கால அவகாசம் வழங்கியும் பஜாஜ் நிறுவனம் அதனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுவதாக கூறப்படுகின்றது.கடன் பெற்றவர்கள் தவணை தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வதுடன், தவணை தொகை செலுத்தாதவர்களுக்கு ஒரு கடனுக்கு 450 ரூபாய் அபராதமும் விதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் இன்று அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.குறைந்த அளவு தவணை தொகைக்கு காசோலையில் பணம் இல்லாததால் வங்கியில் தனியாக அபராதமும், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் தனி அபராதமும் விதிக்கப் படுவதாகவும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள், கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். ஏற்கனவே கடன் பெற்று முழுத் தொகையையும் செலுத்திய பழைய வாடிக்கையாளர்களுக்கும் கூட அபராத தொகை விதித்திருந்ததால் , அவர்களும் பழைய ஆவணங்களுடன் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் குவிந்தனர்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவவே,அங்கு சென்ற காவல்துறையினர் கூட்டம் சேர்க்காமல் பிரச்சினையை முடித்து வைக்குமாறு நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பந்தைய சாலை பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.