May 29, 2020
தண்டோரா குழு
பன்றி இறைச்சியை கோவில் வாசலில் வீசிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர்.
இந்நிலையில் காலை கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் கோவில் படிகட்டுகளில் இறைச்சி வீசப்பட்டு இருப்பதை பார்த்து வெரைட்டி ஹால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இந்துத்துவ அமைப்பினரும்
கோவில் வாசலில் பன்றி இறைச்சியை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.சம்பவ இடத்தில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார். கோவில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து கோவில் முன்பாக வீசப்பட்டு இருந்த இறைச்சி அகற்றப்பட்டு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.